Uttarakhand Bike Trip 22 Part 3 ( Valley of Flowers)
பள்ளத்தாக்கு பகுதிகளின் கால நிலை அடிக்கடி மாறும் தன்மை கொண்டது. தூறல் நின்று சீக்கிரம் வெயில் வரும் என்ற நம்பிக்கையுடன் vof trek ஐ தொடங்கினோம்.
ஒரு பெரிய backpack ஐ முதுகில் கட்டிக்கொண்டு போட்டாவுக்காக போஸ் கொடுத்தோம் . பிறகு அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு மிகச்சிறிய கனம் குறைந்த பைகளை எடுத்துக்கொண்டு மலை ஏற ஆரம்பித்தோம்!!
மணி 7. அப்பொழுதும் மேக மூட்டத்துடன் லேசாக தூறிக்கொண்டுதான் இருந்தது. சிறிது தூரத்திலேயே ஹேம்குந்த் சாஹிப் செல்லும் பாதை பிரிந்தது. நாங்கள் vof நோக்கி இருபுறமும் அடர்ந்த செடிகள் கொண்ட பாதையில் புகுந்தோம்.
நுழைவாயிலில் ஒரு சிறிய அலுவலகம் உள்ளது. காலை ஏழு மணி முதல் நண்பகல் 12 மணி வரையே vof உள்ளே செல்ல அனுமதி. மாலை ஐந்து மணிக்குள் திரும்பிவிட வேண்டும். இல்லையேல் காணாமல் போனவர் பட்டியலில் சேர்த்துவிடுவர்.
இந்தப் பாதையில் கோவேறு கழுதைகள் அனுமதிக்கப்படுவதில்லை. மலை ஏற முடியாதவர்களை கூடைகளில் வைத்து ஆட்கள்தான் சுமந்து செல்கிறார்கள். நாங்கள் சற்று பருமனான ஒரு வயதான தமிழ் பேசும் அம்மாவைப் பார்த்தோம். கட்டில் போன்ற ஒன்றில் அமரவைத்து நான்கு பேர் தூக்கிச் சென்றனர்.
இந்த வழியில் கடைகளும் இல்லை. தாகம் எடுக்கும்போது அங்கு ஓடும் ஓடைகளின் தண்ணீரையே பருகினோம். குளிர்ந்த மூலிகைச் சுவையுடைய நீர்.
VOF, 1931 ல் தற்செயலாக வழி தவறி வந்த பிரிட்டிஷ் மலை ஏற்றக்குழுவால் (lead by Frank S Smythe )கண்டுபிடிக்கப்பட்டது.
1981 ல் பாதுகாக்கப்பட்ட national park ஆக அறிவிக்கப்பட்டது. இந்த புல்வெளி எட்டு கிலோமீட்டர்கள் நீளமும் இரண்டு கிலோமீட்டர்கள் அகலமும் கொண்டது. குளிர் காலங்களில் பனியில் உறைந்து கிடக்கும். மே மாதத்தில் துளிர்த்து எழுந்து ஜுலை ஆகஸ்ட்டில் பூத்து குலுங்கும். 600 மேற்பட்ட வகைகளில் வேறு எங்கும் காணக்கிடைக்காத ஆல்பைன் ( endemic alphine flowers) பூக்கள் பல நிறங்களில் பட்டு போர்த்தியதைப்போல புல்வெளியை அலங்கரிக்கும். செப்டம்பர் அக்டோபரில் மெதுவாக பூக்களும் செடிகளும் மடியத்தொடங்கும்.
மலை ஏற்றம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நன்றாக வெயில் அடிக்க ஆரம்பித்தது. கடக்கவேண்டிய தூரமும் ( நான்கு கிலோமீட்டர்கள்) உயரமும் ( 3049 லிருந்து 3600 மீட்டர்) நேற்றைவிட குறைவுதான். சுலபமாகத்தான் இருந்தது.
திப்ரா பனிப்பாறைகளிலிருந்து ( tipra glaciers) உருகி புஷ்பாவதி நதி vof ஊடாக ஓடுகிறது. இளமை துள்ளலுடன் மலை இறக்கத்தில் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது அந்த பூக்களின் நதி. இது கங்காரியாவில் பையுந்தர்(bhyunder )என்ற நதியுடன் இணைந்து லஷ்மண் கங்காவாகி அலகானந்தாவில் கலக்கிறது.
சிறிது நேரத்தில் மேகமூட்டமாகி தூறத்தொடங்கியது.
ஆனால் ரெயின் கோட்டைபோடுவதற்க்குள் மீண்டும் வெயிலடித்தது. ரெயின் கோட்டை கழற்றுவதற்க்குள் மழை தூறியது!
வானிலை நிமிடத்திற்க்கு நிமிடம் மாறிக்கொண்டே இருந்தது.
மக்கும் இலை, இளம் பச்சை செடிகள், பூக்கள், ஈர மண் இவை அனைத்தின் நறுமணமும் கலந்த காட்டின் வாசனை கிறங்கடித்தது.
வனத்தின் பேரமைதியுடன் சிறு பூச்சிகள் நிகழ்த்தும் உரையாடல் ரீங்காரமாய் தொடர்ந்து வந்தது.
வழியில் இரண்டு மூன்று வகைப்பூக்கள் கொண்ட செடிகளை மட்டுமே பார்க்கமுடிந்தது. உடன் வந்த guide , பூக்களின் வகைகள் ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருவதாக தெரிவித்தான்.
பதினோரு மணிக்கு valley ஐ அடைந்து விட்டோம். Vof ஐ பார்த்தவுடன் பூடானின் போப்ஜிக்கா ( phobjikha) valley நினைவிற்க்கு வந்தது. இரண்டுமே கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த இடத்தில் பனி உருகி உருவான U வடிவிலான புல்வெளிகள்.
தூரத்தில் எறும்புகளாய் மனிதர்கள் தெரிந்தனர். வெயிலும் மேகத்தின் நிழலும் பச்சை புல் வெளியின்மேல் திட்டுக்களாய் பரவியிருந்தன.
மணி நண்பகல் 12.
எதிரில் தெரிந்த அழகில் பிரம்மித்து நின்றோம். பார்வையாளர்களைப் பார்த்து உற்சாகமாகிய இயற்க்கை ஒரு மாயாஜால வித்தையையே நடத்தியது. வெயில், தூறல் ,இரு மலைகளின் இடைவெளியில் வேகமாக வந்து புல்வெளியை நிரப்பும் மேகம் என்று.
கண்ணை மூடி கிறங்கி நின்றோம்.
பறவையின் இறகாக எடையின்றி மிதப்பது போலிருந்தது.
காற்று புல்வெளியுடன் உரசும் ஒலி ஓஓஓஓ என்றது இரு காதுகளிலும். காலம் உறைந்து நின்றது சில நிமிடங்கள்.
எதிரில் பனி போர்த்திய சிகரங்களுடன் மலைகள் நிமிர்ந்து நின்றன. அந்த பிரம்மாண்டத்தின் முன் சிறு துரும்பாக உணர்ந்து மண்டியிட்டோம். மனித இனத்தின் மூலம் மலைகள் அல்லவா. மலை இல்லையேல் மழை இல்லை - பனி உருகி ஓடும் ஆறுகள் இல்லை. நம் கடவுள்களின் கடவுள் இம்மலைகள்.
புல்வெளியில் பூக்கள் குறைவாகத்தான் இருந்தது. முதலில் பருவம் கடந்து தாமதமாக வந்ததே காரணம் என நினைத்தோம். அடுத்த வருடம் மீண்டும் ஜூலை மாதத்தில் வரலாமா என பேசிக்கொண்டோம். பின்னர்தான் தெரிந்தது பூக்கள் குறைந்ததற்க்கு பல காரணங்கள்.
உத்தராகண்ட்டில் இந்த வருட கோடை வரலாறு காணாத அளவுக்கு வெப்பமானதாக இருந்தது. அதனால் பனி வழக்கத்தைவிட சீக்கிரமே ( மார்ச்சில்) உருகி புஷ்பாவதி பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிட்டது. புல்வெளியும் சீக்கிரமே துளிர்க்க ஆரம்பித்தது. பூக்கள் மே மாதத்திலேயே பூத்துக்குலுங்கின. ஜுன் ஜீலையில் அவை பாதியாகி செப்டம்பரில் மிகக் குறைவாகவே இருந்தன. இந்த கால நிலை மாற்றத்தால் நிறைய புதர் செடிகளும் , களைகளும் அதிகமாகி பூச்செடிகளை பாதிப்பதாகவும் சொல்கிறார்கள்.
சுற்றுலா பயணிகள் தங்களுக்கு வரையருக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி புல்வெளிகளுக்குள் நுழைந்து செய்யும் ஆர்பாட்டங்களும் பூக்கள் குறைந்ததற்க்கான மற்றொரு காரணம்.
முன்பு இருந்ததைப்போல மீண்டும் பல நூறு வகைகள் கொண்ட பூக்களுடன் vof ஐ பார்க்கவே முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டது.
திரும்பி இறங்க ஆரம்பிக்கும் போது மேகமூட்டமாகி தூற ஆரம்பித்துவிட்டது. குளிர் வேறு. இன்றே கங்காரியாவிலிருந்து கீழிறங்கி கோவிந்த் காட் செல்லவும் திட்டமிட்டிருந்தோம். அர்விந்தும் செந்திலும் ஹெலிகாப்டரில் சென்றனர். நான் கோவேறு கழுதைமேல் அமர்ந்து செல்ல முயற்ச்சித்து - தோற்று - முடிவில் பைகளை மட்டும் அவைகள் மேல் ஏற்றிவிட்டு நடந்தே இறங்கினேன். கூடவே அதன் எஜமானன் அவைகளை அதட்டி வழி நடத்திக் கொண்டுவந்தான்.
நான்கு மணிக்கு ஆரம்பித்த பயணம் ஏழு மணி வரை நீண்டது. முடிவில் நன்றாக இருட்டிவிட்டது. வழியில் ஆட்களே இல்லை. வானத்தில் நிலவு மேகங்களுக்குள் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது. பாதை சரியாக தெரியவில்லை. எஜமானன் கச்சர்களை அதட்டுவதை நிறுத்திவிட்டு மெளனமாக நடந்து வந்துகொண்டிருந்தான். எங்கும் அமைதி. கச்சர்களின் குளம்பொலியும் சலங்கை ஒலியும் மட்டும் தொடர்ந்தது கேட்டுக்கொண்டிருந்தது.
தொடரும்….
Comments
Post a Comment