Uttarakhand Bike Trip 22 Bloopers ☺☺☺
1. கரியாகிப்போன Riding Jacket
வாங்கி எட்டு வருஷம் ஆச்சே- பல பைக் trip போய் வந்தாச்சே- ஒரு முறையாவது Riding Jacket க்கு தண்ணிய காட்டுவோமே என்ற நல்ல எண்ணத்தில் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தேன். அதிலிருந்து கருப்பு கட்டிகளும் மாவு மாதிரி கரிய நிற துகள்களும் jacket -ந் முதுகுப்பகுதியிலிருந்து கொட்ட ஆரம்பித்துவிட்டது. Airport, aeroplane, taxi என்று சென்ற இடமெல்லாம் கருப்பு பெளடரால் நாசம். டெஹ்ராடுன் வந்த பிறகுதான் இரண்டு பைக் experts( நம்ம ஆளுங்கதான்)அதற்க்கான காரணத்தை கண்டுபிடித்தார்கள். “தம்பி அந்த riding jacket ல் இருக்கும் pads ஐ எல்லாம் துவைக்கறதுக்கு முன்னாடி எடுத்து தனியா வச்சுரனும்னு தெரியாதா” என்று கேட்டனர். முன்ன பின்ன இதையெல்லாம் துவைச்சிருந்தாதானே தெரிஞ்சிருக்கும் ம்ம்ம்ஹீம்ம்ம்ம்
நாங்கெல்லாம் bike rider ஆக்கும் என்று மற்றவர்களிடம் பீத்திக்கொள்ள Royal Enfield டி ஷர்ட்கள் இரண்டு மூன்று வாங்கியிருந்தேன். அன்று அதில் ஒன்றை அணிந்திருந்தேன். நாக்பூர் ஏர்போர்ட்டில் அடையாள அட்டையை சரிபார்த்து உள்ளே அனுமதிக்கும் ராணுவ சிப்பாய் ஒருவன் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி. ஆப் ராயல் என்பீல்ட் மே காம் கர்த்தே ஹ க்யா ? ( நீங்க ராயல் என்பீல்ட் கம்பனியில் வேலை செய்பவரா?). நான் தனியாக இருக்கும்போது கேட்டிருந்தாலும் பரவாயில்லை. மனைவி நக்கலாக சிரித்தாள்( எத்தனை வருடங்கள் இதை சொல்லி மானத்தை வாங்கப் போகிறாளோ). பதில் ஏதும் சொல்லாமல் ஹிஹி என்று மழுப்பிவிட்டு நகர்ந்தேன்.
3. அம்பானி வந்தாக … ஆதானி வந்தாக ….
டேஹ்ராடுன் பத்மினி பேலஸ் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். மிகவும் சுமாரான லாட்ஜ். அர்விந்தின் டாக்ஸி ஓட்டுனர் அந்த ஹோட்டலின் பெருமைகளை சொல்லி கொண்டே வந்தான்( ஒருவேளை அவந்தான் அதை சிபாரிசு செய்தானோ). கடைசியாக போட்டான் ஒரு குண்டு. அம்பானியும் ஆதானியும் டெஹ்ராடுன் வந்தால் பத்மினி பேலஸில்தான் தங்குவார்கள் என்று!
4. மேரா பாஷா ஹிந்தி ஹ
நானும் செந்திலும் அங்குள்ளவர்களிடம் ஓரளவுக்கு சரளமாக ஹிந்தியில் உரையாடுவதைப் பார்த்து ( நீங்க பேசறது சுத்தமா ஒன்னும் புரியல என்று) தலை சுத்திய அர்விந்த் - டேய் பாருங்கடா நானும் கத்துக்க போறேன் ஹிந்தி என்று சபதமெடுத்துள்ளான். என்ன அர்விந்த் கிளாஸ் ஷுரு ஹோகையா க்யா?
5. கும்மிருட்டை கேமராவால் படம் பிடிக்க முடியுமா?
பைக் ஓட்டும் போது வழக்கமாக gopro helmet ல் பொருத்தப்பட்டிருக்கும். பைக்கில் உள்ள மொபைல் ஹோல்டரில் மொபைலை வைத்து அதன் மூலம் gopro வை இயக்குவதுதான் படம் பிடிக்க சுலபமான வழி. முதல் நாள் கும்கால் செல்லும்போது டீ சாப்பிட நிறுத்திய இடத்தில் gopro வை helmet லிருந்து கழற்றி riding jacket ல் வைத்திருந்தேன் - பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று. மறுபடியும் ஹெல்மட்டில் பொருத்த மறந்துவிட்டேன். அது தெரியாமலேயே கேமராவை ஆன் , ஆப் செய்து கொண்டிருந்தேன் - அழகான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு. ஆனால் பாக்கெட்டின் கும்மிருட்டு மட்டுமே பதிவாகிக் கொண்டிருந்தது.
6. அன்பா இல்லை அம்பா
கும்காலுக்கு சென்றுகொண்டிருந்த போது நீண்ட நேரமானதால் வழி தவறிவிட்டேனோ என்ற ஐயம் ஏற்பட்டது. காட்டு வழி. ஆட்களைக் காண்பதே அரிதாக இருந்தது. தனியாக ஒருவன் நடந்து போய்கொண்டிருந்தான். விவசாய வேலை செய்பவன் போலிருந்தான். அவனிடம் கும்காலுக்கு இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டேன். ஆறு கிலோ மீட்டர்கள் என சொல்லிவிட்டு அவனும் அங்குதான் செல்வதாகவும் லிப்ட் தரும்படியும் கேட்டான். அப்போதுதான் அவன் கையில் இருந்த பெரிய அரிவாளைப் பார்த்தேன். என்னதான் எளிய மனிதர்கள்மேல் நம்பிக்கை இருந்தாலும், பயம் ஆறு கிலோமீட்டர்களை அறுபது கிலோமீட்டர்களாக உணரவைத்தது.
7. குருடனும் செவிடனும்
இரண்டாம் நாள் கோவிந்த் காட் டிலுள்ள பகத் ஹோட்டலை அடைந்ததும், மலை ஏறும் அவசரத்தில் reception எங்கே என ஒருவனைக் கேட்டேன். அவன் கைகாட்டிய திசையில் மிகவும் கூட்டமாக இருந்தது. இரண்டு பெண்கள் பரபரப்பாக வந்திருந்த ஆட்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். நான் என்னுடைய நண்பர்கள் புக் செய்திருப்பதாக தெரிவித்தேன். அவர்கள் அப்படி ஒரு பெயரே இல்லையே என சொல்லி ஒரே களேபரம். நான் அர்விந்துக்கு போன் செய்து அவன் வந்த பிறகுதான் புரிந்தது -அது Air Deccan reception என்று. அதாவது கங்காரியா செல்ல ஹெலிகாப்டர் பதிவு செய்யுமிடம். அதுவும் பகத் ஹோட்டலின் ஒரு பகுதியில்தான் உள்ளது. ஆனால் தெளிவாக பெயர்ப்பலகை வெளியே உள்ளதை அப்போதுதான் பார்த்தேன்.
8. பஞ்சாபில் தோசை கிடைக்குமா?
கங்காரியாவில் நிறைய பஞ்சாபி உணவகங்கள் இருந்தன. எங்களுக்கு திடீரென்று தோசை சாப்பிட ஆசை. மூன்று தோசை சொல்லிவிட்டு காத்திருந்தோம். தோசை வந்ததும் அதிர்ச்சி. டேபிள் நீளத்திற்க்கு இருந்தது ஒரு தோசை. அவசர அவசரமாக மற்ற தோசைகளை கேன்ஸல் செய்துவிட்டு மூன்று பேரும் சேர்ந்து அந்த ஒரு தோசையையே சாப்பிட்டு முடிக்க திணறினோம்.
9. என்னைப்பார்த்து ஏண்டா கேட்டாய்
துங்கானாத் trek முடித்துவிட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தேன். இரவில் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்த அந்த கோஷ்டி மிகவும் தாமதமாக அப்பொழுதுதான் மலை ஏறிக் கொண்டிருந்தது. அந்த குழுவிலிருந்த ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் “ uncle ஒளர் கித்னா தூர் ஹை?” என்று கேட்டான். நான் எனக்கு பின்னால் யாராவது அங்கிள் இருக்கிறாரா என்று திரும்பி பார்த்தேன். “ uncle ஆப்சே பூச் ரஹா ஹூம்” என்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னொரு uncle போட்டான். பக்கத்தில் அழகான பெண் இருக்கும் திமிர். அவனை முறைத்துவிட்டு - தம்பி போபோ இன்னும் நிறைய தூரம் போகனும் என்றேன். ச்சே இந்த வெள்ளை முடியை என்ன செய்வதென்று தெரியவில்லை. Hair dye அலர்ஜி என்றால் முடியை கருப்பாக்க வேறு வழியே இல்லையா? என்ன விஞ்ஞானம் வளர்ந்திருக்கோ… புடலங்காய்…
10. வெள்ளையாகிப் போன கருப்பு
அலகானந்தாவை ஒட்டி வரும் NH 7 ல் நிறைய இடங்களில் பராமரிப்பு சாலை வேலைகள் நடந்து கொண்டிருந்தது. மழை இல்லாமல் வெயில் அடிக்க ஆரம்பித்ததும் லைம் (limestone) பாறைகளிலிருந்து வெள்ளை தூள்கள் காற்றில் பறந்து பைக், பைகள், riding gears மேல் எல்லாம் அப்பிக் கொண்டது. துங்கனாத்திலிருந்து ஶ்ரீ நகர் சேரும் முன் நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு விடுதியில் ( ஆள் நடமாட்டமே இல்லாமல காலியாகத்தான் இருந்தது) tariff எவ்வளவு என்றேன். அவன் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ ரூம்ஸ் நஹி ஹ - full ஹ” என்றான். என் தோற்றத்தைப்பார்த்து லாட்ஜ் நாசமாகிவிடும் என்று பயந்திருப்பான போல.
Vow💐 very Nice Buddha💐💐👍👍
ReplyDelete