Uttarakhand Bike Trip 22 Final Part ( Chopta Tunganath)



 

இருட்டில் ஆட்களே இல்லாத அந்த காட்டுப்பாதையில் நடந்து வரும்பொழுது  சிறிதளவும் அச்சமோ நம்மிக்கையின்மையோ ஏற்படவில்லை. மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன்.

அந்த எளிய மனிதர்களின் நேர்மையைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். யாரென்றே தெரியாத ஒருவனிடம் பைகளை கொடுத்து விட்டால் சரியாக சென்று சேர்கிறது. ஒன்றும் காணாமல் போவதில்லை. அதிகம் பணம் கேட்டு பேரம் பேசுவதில்லை.ஒரு ரூபாயைக் கூட கணக்கு பார்த்து சரியாக திருப்பி தருகிறார்கள். அடுத்த நாள் உணவே நிச்சயம் இல்லாத போதும் மனசாட்சி உள்ளவர்களாக உள்ளனர்.இந்தியாவின் ஆன்மா இவர்களைப்போன்ற எளிய மனிதர்கள்தான்.

நாளை அர்விந்தும் செந்திலும் திரும்ப செல்கிறார்கள்.
மூன்று நாட்களுக்கு தனியாக பைக் பயணம்.

செப்டெம்பர் 5

நீண்ட நேரம் உறங்கி தாமதமாக விழித்து இலக்கு இல்லாமல் பயணம் செய்வதிலும் ஒரு சுகம் உள்ளது. இன்று அருகிலுள்ள ஒளலி (auli) என்ற இடத்திற்க்கு செல்ல முடிவெடுத்தேன். ஜோஷிமட் வழியாக சென்று கொண்டிருந்தேன். வழியில் முதுகுப்பையுடன் ஒரு இளைஞன் லிப்ட் கேட்டான். குஜராத்திலிருந்து தனியாக பஸ் பயணங்களின் மூலமாகவே வந்திருக்கிறான். Vof யையும் ஹேம்குந்த் சாஹிப்பையும் ஒரே நாளில் trek செய்திருக்கிறான்!
கடினமான பல trek வழிகளைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான்.

Auli

கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் உள்ள இது குளிர்காலத்தில் skiing செய்ய பிரபலமான இடம். ski செய்ய ஏற்ற மலைச்சரிவுகளும் அதற்க்கு எதிரில் இமய மலைத்தொடரும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடியவை.
கோடை நாட்களிலும் ski செய்ய - செயற்க்கை பனியை உருவாக்க - ஒரு ஏரியை தோண்டியுள்ளனர் (artificial lake). அந்த முயற்ச்சி  எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
Rope car ஒன்றும் உள்ளது. அதில் பயணித்துவிட்டு சிறிது தூரம் காட்டில் trek சென்றேன். செப்டம்பரில் பார்க்க auli ல் பெரிதாக ஒன்றும் இல்லை. Ski செய்யும் மலைச்சரிவுகளில் கால் நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
அங்கிருந்த ஒரு கைட்தான் chopta Tunganath trek பற்றி சொன்னான். மீதி இருக்கும் மூன்று நாட்களுக்கு அந்த திட்டம் மிகச்சரியாக பொருந்தியது.

செப்டம்பர் 6




இன்று  பத்ரிநாத் கோயிலுக்கும் இந்தியாவின் கடைசி கிராமம் என்றழைக்கப்படும் மனா என்ற இடத்திற்க்கும் சென்றுவிட்டு மதிய உணவிற்க்கு கோவிந்த் காட் திரும்பினேன்.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பகத்- தில் இரவு பகலாக வெறும் மூன்று பேர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்வதை கவனித்தேன். சமையல் செய்ய - பரிமாற ஒருவன். அவனுக்கு உதவியாக இன்னொருவன். மூன்றாவது மேனேஜர். அவர்தான் உரிமையாளராக இருக்கவேண்டும்.ஒருவேளை இப்படி உழைத்தால்தான் லாபம் பார்க்கமுடியுமோ என்னவோ.

புறப்படும்போது அந்த மேனேஜர், அடுத்து எங்கு - எந்த வழியில்செல்லப்போகிறேன் என்று விசாரித்தார். சோப்டா துங்கனாத் - ருத் ரப் ரயாக் வழியாக செல்லவிருப்பதை சொன்னேன். சற்று புன்னகையுடன் அது சரியான வழி அல்ல எனவும் சமோலியிலிருந்தே வேறு பாதையில் செல்ல வேண்டும் எனவும் வரைபடத்தின் உதவியுடன் விளக்கினார். அப்போதுதான் உத்ராகண்ட்டில் இரண்டு சோப்டாக்கள் ( chopta) இருப்பது தெரியவந்தது. கேட்காமலே உதவிய அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சோப்டா துங்கனாத் நோக்கி பயணப்பட்டேன்.

மொத்தம் நூற்றி இருபது கிலோமீட்டர்கள். சுமார் ஐம்பது கிலோமீட்டர்கள் அகலமான NH 7 ம் மீதி அறுபது எழுபது கிலோமீட்டர்கள் குறுகலான மலைப்பாதைகளிலும் பயணம். இதுவரை பயணம் செய்த பாதைகளைப் போலவேதான் இருந்தது.
சோப்டாவை நெருங்கும் போது - கடைசி முப்பது கிலோமீட்டர்கள் அடர்ந்த காடு . சென்றடைய ஆறரை மணியாகி விட்டது. இருட்டிவிட்டது. கங்காரியாவை விட குளிர் அதிகம்.

சோப்டா -கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. இது இந்தியாவின் மினி சுவிட்சர்லாண்ட் என்று அழைக்கப்படும் இடம். புல்வெளிகளில் நிறைந்த - கோடையிலும் குளிரான மலைப்பிரதேசம். அந்த புல்வெளிகளில் டெண்ட் போட்டு தங்குமிடங்களை உருவாக்கியிருந்தனர்.

சோப்டா, மிகச்சிறிய கிராமம் போலத்தான் இருந்தது. நான்கு ஐந்து லாட்ஜ்கள், ஆறேழு கடைகள். அவையும் அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடியவையாக இருந்தன. பெட் ரோலுக்குக் கூட முப்பது நாற்பது கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும்.
லாட்ஜில் பேட்டரி மூலமே மின்விளக்கு எரிந்தது. மொபைல் போனை மட்டுமே சார்ஜ் செய்ய அனுமதித்தனர். சுடுதண்ணீருக்கு தனியாக சொல்லவேண்டும். தகர கூரை. பனி கீழே இறங்கியது. நல்ல வேலை கம்பளி தாராளமாக கிடைத்தது. குளிர் தாங்காமல் வேறு வழியில்லாமல் பைக் ஓட்ட பயன்படுத்தும் jacket மற்றும் பாண்ட் அணிந்துகொண்டு உறங்கினேன். பக்கத்து அறையில் ஒரு இளைஞர்- இளைஞிகள் பட்டாளம் கும்மாளமடித்து கொண்டிருந்தது இரவு நெடு நேரம் வரை.

Chopta Tunganath temple





இதுதான் இருப்பதிலேயே அதிக உயரத்திலுள்ள சிவன் கோயில். பாஞ்ச் கேதார்களில் ஒன்று. குளிர் காலங்களில் பனியில் உறைந்திருக்கும். மீதி ஆறு மாதங்களில் மட்டுமே அங்கு செல்லமுடியும். சோப்டாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் trek செய்ய வேண்டும். பாதை நன்றாக கற்கள் வேயப்பட்டு படிகளுடன் உள்ளது. Trek மிகவும் ஏற்றமாக ( steep) இருக்கும். 3000 மீட்டரிலிருந்து 3600 மீட்டர்கள் உயரத்தை அடைய வேண்டும்.

செப்டம்பர் 7. விடியற்காலை டீ குடிக்கும் பொழுதே பனிபடர்ந்த இமயமலை சிகரங்களின் தரிசனம் கிடைத்தது. ஏழு மணிக்கு முன்னரே கிளம்பி விட்டேன்.
அப்பொழுதே பரபரப்பாக நிறைய பேர் மலை ஏறிக்கொண்டிருந்தனர். இங்கு கச்சர்களின் மேல் பயணிக்கலாம். நிறைய இளைஞர்களே அவைகளின் மீதமர்ந்து வந்தது ஆச்சரியம்.

காலை தியான அமைதியுடன் மனம் ஒருமித்திருந்தது. இடதுபுறம் இமயமலைத்தொடர் கூடவே காட்சியளித்துக் கொண்டு வந்தது.
காலை வெயிலில் பனி போர்த்திய சிகரங்கள் மின்னின. மேகம் அதிகமில்லாத நீல வானம் பின்புறத்தில் ஓவியமாக அழகு சேர்த்தது. மேலே ஏற ஏற வித விதமான கோணங்களில் இமய மலைத்தொடரை பார்க்க முடிந்தது.

ஒவ்வொரு கிலோமீட்டரிலும் சிற்றுண்டி கடைகளுண்டு. குளிருக்கு சூடாக டீ சாப்பிட்டுகொண்டே சென்றேன். பத்து மணிக்கெல்லாம் கோயில் சென்று சேர்ந்து விட்டேன். மிகச்சிறிய கோவில். கடவுளை தரிசித்துவிட்டு அரை மணி நேரம் இமய மலைத்தொடரை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

பிறகு கீழிறங்கி தாமதிக்காமல் உடனே ஶ்ரீ நகர் நோக்கி புறப்பட்டுவிட்டேன். அடிப்படை வசதிகளால் போரடித்து மனம் ஒரு நல்ல லாட்ஜி ற்க்காக ஏங்க ஆரம்பித்துவிட்டது. வழியில் ஒரு குஜராத்தி பைக்கர்ஸ் கேங்கைப் பார்த்தேன். மூன்றாவதாக இன்னொரு குஜராத்தியும் போஸ்டர்களில் உதராகண்ட் முழுவதும் தொடர்ந்துகொண்டே வந்தார்!!

அடுத்த நாள் - செப்டம்பர் 8- அலகானந்தாவை நதியை ஒட்டி செல்லும் அந்த முதன்மை பாதை வழியாக டெஹ்ராடுன் சென்றடைந்தேன். மதிய வேளையில் நல்ல வெயில். வேர்வை வழிந்தது. கடைசி இரண்டு நாட்கள் பயணத்தில் முதலில் இருந்த உற்சாகம் இல்லை - சலித்துவிட்டது.

ஐந்து மணிக்கு டெஹ்ராடுன் சென்றடைந்தேன். பைக்கை திரும்ப உரிமையாளனிடம் ஒப்படைத்துவிட்டு லைப் ஆப் பை புலி போல திரும்பி பார்க்காமல் எதிர் திசையில் கான்கிரீட் ஜங்கிலை நோக்கி நடந்தேன்.


நிறைவு

Comments

  1. krishnakumar ChandrasekaranOctober 9, 2022 at 3:34 PM

    Fantastic experience Buddha. Great wiring skills

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Ragging: When My Heart Skipped A Few Beats!

Lage Raho Munna Bhai – “GandhiGiri” a modern tribute to Mahatma

Mahanadhi - a common man's fight against flawed system