நண்பகல் நேரத்து மயக்கம் - Lijo Pellissery
லிஜோ பெல்லிஸ்ஸெரி - இவரை இந்திய மாற்றுச்சினிமாவின் முகம் என்று சொல்லலாம். இவரின் ஒவ்வொரு படமும் ஒருவிதம்; பெரும்பாலும் எல்லாமே சோதனை முயற்ச்சிகள். இருந்தும் முழுவதுமாக ரசிக்கக் கூடியவைகள். அவரின் முந்தைய படமான churuli மட்டும் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை. இவரின் படம் எப்பொழுது வெளியாகும் என காத்திருக்கும் தனி ரசிகர் வட்டமுண்டு இவருக்கு. ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம், தான் லிஜோவின் ரசிகன் என்று சொன்னதாக ஞாபகம்.
இந்த படமும் அவரின் பெரும்பாலான படங்களைப்போலவே எஸ் ஹரீஸ்ஸின் சிறுகதையை மூலமாகக் கொண்டதுதான்.
கதை. மலையாள கிறிஸ்து ஜேம்ஸ், தன் மனைவி, மகன் மற்றும் ஊர்காரர்களுடன் சேர்ந்து குழுவாக வேளாங்கண்ணி புனித யாத்திரையை முடித்துவிட்டு ஒரு வேனில் ஊர் திரும்புகிறார். அவருக்கு தமிழ் சாப்பாடு பிடிக்காது;தமிழ் பாடல்கள் பிடிக்காது; தமிழ் பேசத்தெரியாது; குடிக்க மாட்டார். வண்டி தமிழ் நாட்டின் வழியாக சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு நண்பகல் நேரம். எல்லாரும் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஓட்டுநரும் பாதி தூக்கத்தில் இருக்கிறார். அப்பொழுது ஒரு குக்கிராமம் வரும்போது தூக்கத்திலிருந்து விழித்த ஜேம்ஸ் அரை மயக்கத்தில் வண்டியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தச் சொல்லி இறங்கி பழக்கப்பட்டவர் போல தன்னிச்சையாக ஒரு வீட்டை நோக்கிச் செல்கிறார். அங்கு தன்னை ,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போல சுந்தரமாக உணர்ந்து செயல்படுகிறார். தமிழ் பேசுகிறார்;தமிழில் பாடுகிறார்;சிவ பக்தனாகிறார்; குடிக்கவும் செய்கிறார். அவரின் பேச்சு, பாவனைகள் - உருவம் தவிர எல்லாமே - சுந்தரம் போலவே இருக்கிறது. மனைவி பூங்குழலி, மகள் முத்து, அப்பா பழனி, கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு தொடந்து tv யில் பழைய தமிழ் படங்களை பார்த்து அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் கண் பார்வை தெரியாத அம்மா, சவலை நாய் - இதுதான் சுந்தரத்தின் குடும்பம். இந்த திடீர் மாற்றம் சுந்தரம் மற்றும் ஜேம்ஸ்ஸின் குடும்பத்தில், ஊர்காரர்களிடத்தில் எந்த விதமான பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன என்பதுதான் கதை. முடிவு யூகிக்கும் படியாக இருந்தாலும் அதற்க்கு அப்புறமும் ஒரு திருப்பம் உண்டு!
இரண்டு ராட்சசர்கள் இப்படத்தை தாங்கிப் பிடித்துள்ளனர்.
ஒன்று இயக்குனர் லிஜோ பெல்லிஸ்ஸேரி. மற்றொருவர் மம்மூட்டி.
இந்த கதையின் அடிப்படையை ஒரு திருக்குறளை வைத்து எளிமையாக பார்வையாளனுக்கு உணர்த்திவிடுகிறார்.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.
(உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு)
அனேகமாக இந்த குறள்தான் கதையை எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.
இந்த உத்தியைப் பயன்படுத்தி பல கேள்விகளை பார்வையாளர்களின் மனதில் எழ வைத்து வாழ்க்கைத் தத்துவங்களை - அர்த்தங்களை புரிந்து கொள்ள வைக்கிறார்.
உதாரணமாக சுந்தரமாக மாறிய ஜேம்ஸ்ஸை கண் பார்வையற்ற அவன் அம்மாவும், சவலை நாயும் மட்டுமே சந்தேகிக்காமல் முதலிலிருந்தே இயல்பாக ஏற்றுக் கொள்கின்றனர்.
ஒரு வேளை கண்பார்வையும் ஐந்தறிவும்தான் மதியை மயக்குகிறதோ - மற்ற புலன்களை முழு திறனுடன் செயல்படாமல் தடுக்கிறதோ ? இருட்டில் கண்பார்வை தெரியாதவன் தானே வலிமையானவனாக இருக்க முடியும்!ஜெயமோகனின் கதையில் வருவது போல ஒரு மல்லிகைப்பூவின் மணத்திற்க்கும் இன்னொரு மல்லிகைப்பூவின் மணத்திற்க்கும் உள்ள வேறுபாட்டை அறியும் திறனை ஏன் நாம் வளர்த்துக்கொள்ள முடிய வில்லை? எல்லா (சீன )மனிதர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று சொல்வதைப்போல அல்லவா இந்த வேறுபாட்டை அறியாதது.
அடுத்து, தன்னை ஏற்றுக்கொள்ளாத குடுப்பத்தினரையும் கிராம மக்களையும் பார்த்து “ நான் இந்த ஊர்க்காரன் இல்லையாம்” என்று உணர்ச்சிகரமாக மம்மூட்டி பேசும்போது அவரின் குரல்
பிரிவினையால் பாதிக்கப்படும் சிறு பான்மையினர், புலம் பெயந்தவர்களின் குரலாகத்தான் ஒலிக்கிறது( நான் இந்தியன் இல்லையாம். நான் தமிழ் நாட்டுக்காரன் இல்லையாம். நான் அந்த ஜாதிக்காரன் இல்லையாம் - என்பதுபோல ).
மறுபிறப்பில் ஒருவன் யாராக வேண்டுமானாலும் பிறக்கலாம் என்ற எண்ணமே ஒரு சமத்துவ சிந்தனைதானே. மதம், நாடு, மொழி, சாதி கடந்து மனித இனம் ஒன்று என்பதை ஏற்பதுதானே.
சங்கடம் சங்கடம்தான் அது உங்க வீட்ல இருந்தா என்ன எங்க வீட்ல இருந்தா என்ன - அந்த குக்கிராமத்தின் பெரியவர் ஒருவர் சொல்கிறார். மற்றவர்கள் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் அந்த மலையாளக் குழுவிலிருந்து ஒருவன் தன் மனைவியுடன் வழியில் வரும் வண்டியில் ஏறி சென்றுவிடுகிறான்.பஸ்ஸின் முன் இரண்டு பேர் பேசிக் கொள்கிறார்கள்- “நாம நேத்து நினச்சிருப்பமா இப்படி இவங்கக் கூட இந்த இடத்தில் இருப்பம்னு”.
இந்த கட்சிகள் ஒவ்வொன்றும் நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.
மம்மூட்டியின் நடிப்பு , சற்றும் மிகை இல்லாமல் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். ஜேம்ஸ் சுந்தரமான அடுத்த நொடியில் மம்மூட்டியின் உடல் மொழி வேறாகிவிடுகிறது. பாரின்( bar) ஒலிப்பொருக்கியில் வரும் சிவாஜியின் வசனத்திற்க்கு அவர் வாயசைக்கும் இரண்டு மூன்று நிமிடம் தொடந்து செல்லும் காட்சி அருமை. சுந்தரம் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் போது அதில் தனக்கு அறிமுகமில்லாத வேறு முகத்தைக் கண்டு ஏற்படும் அதிர்ச்சி, குழப்பம், பயம் போன்ற உணர்ச்சிகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், சூப்பர் ஸ்டாரான அவர் இந்த மாதிரி படங்களில் நடிக்க சம்மதித்ததே பாராட்டுக்குறியது ( தமிழில் நடக்குமா இது ?). அதனுடன் நிற்காமல் இந்த படத்தை இணைந்து தயாரித்துமிருக்கிறார்.
ஒளிப்பதிவு. சரியாக இந்த படத்திற்க்குத் தேவையான mood ஐ உருவாக்குகிறது. நிலையான long shots , lengthy shots without any cuts - இவை எல்லாமே பொருத்தமாக இருக்கிறது. நண்பகல் நேரத்தில் அனைவரும் உறங்குவது போல வரும் காட்சிகள் ஒரு கனவுத்தன்மையை ஏற்படுத்துகிறது.
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பழைய படங்களின் வசனங்கள் மற்றும் பாடல்கள் படம் நெடுக வந்து கொண்டே இருக்கிறது. இயல்பான நடிப்பில் ஆர்ட் சினிமா பாணியில் சொல்லப்படும் காட்சிகளுடன் , அதீத நாடகத்தன்மை கொண்ட இவ்வசனங்களும் பாடல்களும் சேர்ந்து ஒரு சம நிலையை உருவாக்குகின்றன. பார்வையாளனக்கு காட்சியின் உணர்ச்சி எளிதாக புரிந்துவிடுகிறது.சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. உதாரணத்திற்க்கு சுந்தரம் மறுபடியும் ஜேம்ஸ்ஸாக மாறி வீட்டை விட்டு போகும் சோகக் காடசியில் “ஆடிய ஆட்டமென்ன “என்ற பாடல் வருமிடம். இந்த பழைய பாடல் - வசனம் உத்தி சிலருக்கு எரிச்சலூட்டவும் செய்யலாம்.
முடிவில் எல்லாரும் வேனில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மம்மூட்டி மட்டும் தூக்கத்திலிருந்து விழித்து குழப்பத்துடன் பார்க்கிறார். இவை எல்லாமே அவருக்கு வந்த சில நிமிடக் கனவு போல தோன்றுகிறது. Like an afternoon dream என்பதுதான் இந்த படத்தின் ஆங்கில டைட்டில்.
ஆனால் இறுதிக்காடசியில் ஏன் சவலை அந்த வேனைத் துரத்திச் செல்கிறது?
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ…
Excellent review Buddhan. You have captured all the important points of the film. Hope to read more of your reviews!
ReplyDelete