விராட் கோலியும் எதிர் பாராது தாக்கிய எரிகல்லும்

 






திருமணமாகி பத்து பதினைந்து ஆண்டுகள்( பத்தா பதினைந்தா…இது கூட சரியா தெரியவில்லை - சரியாக சொன்னால் பதினேழு - இதைப்படித்தால் இப்படித்தான் சொல்வாள்) ஆன பின்னர் மனைவியின் ஒவ்வொரு அசைவிற்க்குமான அர்த்தத்தைப் புரிந்து கொள்வது சுலபம்தான். இருந்தாலும் சில சமயம் எதிர்பாராமல் அடிபட்டு நிலைகுலைந்து போவதும் உண்டு. ஆயிரமாயிரம் ஆண்டுகள் அமைதிக்குப்பின்னர் சட்டென்று எரிகல்லால் தாக்கப்படும் பூமிபோல. 


நேற்று அப்படித்தான் நடந்தது. ஞாயிற்று கிழமை. வழக்கம் போல வேலை அதிகம். இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் லைவ் மாட்ச் சரியாக பார்க்கமுடியவில்லை. எனக்கு பிடித்த விராட் கோலி வேறு நீண்ட நாட்களுக்கு அப்புறம் சதம் அடித்திருந்தான். சரி ஹைலைட்ஸ் ஆவது பார்ப்போமே என்று குழந்தையை தூங்க வைத்துவிட்டு, இரவு பத்து மணிக்கு சாப்பாட்டை தட்டில் எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தேன். டிவி பார்க்காமல் மனைவி ஏதோ தீவிரமாக( அப்படி நினைத்துதான் மாட்டிக்கொண்டேன்) படித்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக இது அவளின் டிவி நேரம். நான் மொபைலில் தான் கிரிக்கெட் பார்ப்பேன். அவளுக்கு கிரிக்கெட் சுத்தமாக பிடிக்காது. நான் கிரிக்கெட் பார்ப்பது அதைவிட சுத்தமாக அவளுக்குப்பிடிக்காது( எந்த மனைவிக்குத்தான் கணவன் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க பிடிக்கும்). நேர விரயம் செய்வதாக அவள் எண்ணம். முந்தைய காலங்களில் அதாவது கணவனும் மனைவியும் ஒரே ஸ்க்ரீனைத்தான் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்த சமயத்தில்- வேறு வழியில்லாமல் என்னோடு கிரிக்கெட் பார்த்திருக்கிறாள். பிரட் லீ அவளுக்குப்பிடித்த கிரிக்கெட்டர். அதற்க்கு அவள் சொன்ன காரணங்கள் கிரிக்கெட் பற்றியதாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. ஸ்மார்ட்டா இருக்கானாம்; அழகாக சிரிக்கிறானாம்.இப்படி விளையாட்டு நுணுக்கங்கள் தெரிந்த ஒரு ஆளை பக்கத்தில் வைத்துக் கொண்டு கிரிக்கெட் பார்ப்பதின் அசெளரியகங்களை அனுபவித்தால்தான் தெரியும். 

சரி கதைக்கு வருவோம். பெரிய ஸ்க்ரீன் கிடைத்த மகிழ்ச்சியில் மெய் மறந்து ஹைலைட்ஸ் பார்த்துக்கொண்டிருந்தேன். விராட் அருமையாக ஆடி சதம் அடித்தான். ஆர்பாட்டமில்லாமல் ஹெல்மெட்டை கழற்றி பேட்டை உயர்த்தி சதத்தைக் கொண்டாடினான். அப்புறம் வழக்கம் போல் கழுத்துச் செயினில் இருந்த வெட்டிங் ரிங்கிற்க்கு முத்தம் தந்தான். 

“ என்ன செய்யிரான் கோலி?” 

மனைவியின் கேள்வி என்னை சற்று திடுக்கிட வைத்தது. தீவிரமாக படித்துக் கொண்டிருந்தவள் எப்பொழுது அருகில் வந்து அமர்ந்தாள்? 

“ஓ அதுவா…வெட்டிங் ரிங் … இப்படித்தான் ஒவ்வொரு முறையும் செய்வான் சதமடித்தவுடன்” என்றேன் டிவி பார்த்துக்கொண்டே மென் சிரிப்புடன். 

“ அப்படியெல்லாம் இருக்காது. இந்த காலத்தில் எவன் மனைவிக்கெல்லாம் நன்றி சொல்லப்போறான்” என்றாள். அவளுக்குத்தெரியும் எனக்கு விராட் கோலி பிடிக்கும் என்று ; நான் கிரிக்கெட் பற்றிய செய்திகளை தொடர்ந்து படிப்பவன் என்று. இருந்தும் இப்படி ஒரு பதில். 
டிவியிலிருந்து பார்வையை திருப்பி ஒரு நிமிடம் யோசித்தேன் என்ன சொல்வதென்று. 

“ நீ விராட்டாக இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டாய்” சட்டென்று ஒரு தீவிரத்துடன் சொன்னாள். 
இது என்ன குற்றச்சாட்டு என குழப்பத்துடன் பார்த்தேன்.
மொபைலிலேயே கிரிக்கெட் பார்த்திருந்திருக்கலாம் …இப்படி மாட்டிக்கொண்டேனே என்று சில வினாடிகள் திரு திருவென விழித்தேன். 
அனுஷ்க்கா மாதிரி அன்பான அழகான பாலிவுட் நடிகை மனைவிக்கு நானும் அப்படித்தானே செய்திருப்பேன் என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன். 
அப்புறம்தான் புரிந்தது. நான் விராட் என்றால் என் மனைவிதான் அனுஷ்கா. ம்ம்ம். 

“ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி. இப்படி எப்படி ஒப்பிடுவது” என சமாளித்தேன். 

“நீ ஒண்ணா நம்பர் பத்மாஷ். உன் வாயாலேயே ஒத்துக்கிட்ட பாரு” என்றாள். 

நான் ஏதோ சப்பை கட்டு கட்ட காரணங்களைத் தேடிக்கொண்டிருந்த பொழுது அவள் பதிலுக்கு காத்திராமல் 
“ என்ன இருந்தாலும் விராட் அப்படி செய்திருக்கக்கூடாது … அவனுக்கு சுத்தமா பொருந்தல” என முனகிக்கொண்டே  அங்கிருந்து சென்று விட்டாள். 

அவளுக்குக் கோபம் என் மீதா. விராட் மீதா. கிரிக்கெட் மீதா. மொத்த ஆண் வர்க்கத்தின் மீதா. 

தொடர்ந்து ஹைலைட்ஸை பார்ப்பதா இல்லையா என்ற குழப்பத்துடன் ப்ரீஸ் செய்யப்பட்டிருந்த டிவி திரையை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். 







Comments

Popular posts from this blog

Ragging: When My Heart Skipped A Few Beats!

Lage Raho Munna Bhai – “GandhiGiri” a modern tribute to Mahatma

Mahanadhi - a common man's fight against flawed system