Uttarakhand Bike Trip 22 Part 2






ரிஷிகேஷிலிருந்து கோவிந்த் காட் செல்லும் முதன்மை (main) சாலை அகலமான NH 7. அது கங்கை நதியின் மூல நதியில் ஒன்றான அலகானந்தாவை இணைபிரியாமல் அது தோன்றுமிடமான பத்ரிநாத் ( கோவிந்த் காட் டிலிருந்து இன்னும் மேலே செல்ல வேண்டும்) வரை நீள்கிறது. வழியில் கிளை நதிகள் அலகானந்தாவில் சேரும் ஐந்து முக்கியமான இடங்கள் உள்ளன.



விஷ்ணு ப்ரயாகில்- டெளலி கங்கா
நந்தா ப்ர யாகில்- நந்தாகினி
கர்ன ப்ரயாகில் - பிண்டார்
ருத்ர ப்ரயாகில் - மந்தாகினி
இறுதியில் தேவ் ப்ரயாகில் பாகிரதி நதியுடன் இணைந்து அலகானந்தா கங்கையாகிறது.

அந்த முதன்மை வழியில்தான் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது.

பயணத்தின்போது ஏற்படும் இதுபோன்ற எதிர்பாராத சிறு தடங்கல்கள் அப்போதைக்கு மன வருத்தத்தை அளித்தாலும், பின்பு யோசிக்கும் போது பயணக்கதைக்கு அவை மேலும் சுவை சேர்ப்பவையாகவே உள்ளன.

உண்மையை சொல்லப்போனால் நிலச்சரிவு நாங்கள் எதிப்பார்க்காத ஒன்றல்ல.குறிப்பாக மழைக்காலங்களில் இது ஒரு சாதாரணமான நிகழ்வு. இமய மலையின் நில அமைப்பு அப்படி. அதற்க்கு காரணங்கள் பல.

அருகில் டாக்ஸி ஓட்டுனர்கள் ஒன்றாகக்கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதிலிருந்து, இன்னொரு ( வடக்கு நோக்கி தெஹ்ரி - tehri வழியாகச் செல்லும்) மாற்றுப் பாதையிலும் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது புரிந்தது. கொவிந்த் காட் செல்ல வேறு வழியே இல்லையா என்று சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் மூன்றாவதாக ஒரு பாதை இருப்பதாகவும் அது மிகவும் சுற்று வழி (எழுபது எண்பது கிலோமீட்டர்கள் அதிகம்) அதுவுமில்லாமல் அந்த பாதையில் நிலச்சரிவு ஏதும் நிகழ்ந்துள்ளதா இல்லையா என்பது தெரியாது -எனவும் தெரிவித்தனர்.
காத்திருக்க விருப்பமில்லாததால் அர்விந்திற்க்கு நடந்த விவரங்களை தெரியப்படுத்திவிட்டு, சற்று “மர்மான”அந்த மூன்றாவது வழியில் ( தெற்க்கு நோக்கி கும்கால், சாத்புலி, தேவ் ப்ரயாக் வழி) கூகுள் வரைபடத்தின் உதவியுடன் பயணத்தை துவங்கினேன்.

கங்கை நதியை ஒட்டி செல்லும் அகலமான பாதையிலிருந்து (NH7) கங்கை ஆற்றை கடந்து மறுபுறமுள்ள ஒரு சிறிய மலைப்பாதையில் நுழைந்தேன். அந்த வழியின் முதல் இலக்கு கும்கால்( Gumkhal), எண்பது கிலோமீட்டர்கள் தூரத்தில்.

இரு பக்கமும் மரங்கள் செடிகள் அடர்ந்து எங்கும் பசுமையாக இருந்தது. நிறைய சிறு ஓடைகள் பாதையை கடந்து ஓடின. வாகனங்கள் அதிகமில்லை. மிக எளிமையான மக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமங்களும் வந்து கொண்டிருந்தன. பூடான் பயணத்தின் போது பார்த்த கிராமங்களை நினைவூட்டியது. தூரம் நீண்டு கொண்டே சென்றது.
நான்கு மணி நேரமாகியது எண்பது கிலோமீட்டர்களை கடக்க. ஆனால் அனுபவித்து மகிழ்ந்த நினைவில் நிற்க்கும் பயணம்.




அர்விந்தும் செந்திலும் எங்கு உள்ளார்கள், எந்த பாதையில் வருகிறார்கள் என ஒரு தகவலும் இல்லை. அவனுக்கு அவ்வப்போது sms ஐ அனுப்பிவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.

இந்த மலைப்பாதை தேவ் ப்ரயாக்கில் NH 7 உடன் சேர்கிறது. நான் அதை தவறவிட்டு விட்டு வேறு பாதையில் சென்றுவிட்டேன். ஶ்ரீநகரில்தான் (uk) NH 7 ஐ அடைந்தேன். மணி மாலை ஐந்து. கொவிந்த் காட்டுக்கு இன்னும் நூற்றி அறுபது கிலோமீட்டர்கள். சென்றடைய குறைந்தபட்சம் ஐந்து மணி நேரமாகும்.

அருகில் அலகானந்தா நதி கவலைகள் ஏதுமின்றி நிறைந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு பேர் ஆற்றை வளைத்து வளைத்து கேமராவால் படம் பிடிப்பதை பார்த்தேன். அட நம்ம அர்விந்த்!

அவர்கள் இரண்டாவது மாற்றுப்பாதையான தெஹ்ரி (Tehri) வழியில் வந்திருந்தனர். அதில் சிறிது நேரத்திலேயே வாகனங்களை செல்ல அனுமதித்ததாகவும் தெரிவித்தனர்.
நான் வந்த வழியைவிட தூரம் குறைவு.

எப்படியும் இரவு கோவிந்த் காட் சென்றுவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆறறை மணிக்கு இருட்டி விட்டது. பத்து கிலோமீட்டர்களுக்கு ஒரு இடத்தில் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சரிசெய்த தடம் தெரிந்தது. சில இடங்களில் பெரிய பாறாங்கற்களை சாலையில் பார்க்க முடிந்தது. எட்டு மணி வாக்கில் தூறவும் ஆரம்பித்தது. அதனுடன் சேர்ந்து
பணிரெண்டு மணி நேரத்திற்க்கு மேலான பைக் பயணம் மனதையும் உடலையும் களைப்பாக்கியது. எப்படி கோவிந்த் காட் செல்லப் போகிறோம் என்ற தவிப்புடன் குழப்பமும் சேர்ந்து கொண்டது.
அப்பொழுது அர்விந்திடமிருந்து தொடர்ந்து போன் வந்து கொண்டே இருந்தது. என்னவோ ஏதோவென்று வண்டியை நிறுத்திவிட்டு பேசினேன்.
அவர்கள் இன்னமும் ஜோசிமட் கூட சேரவில்லை எனவும் மழையால் நிலச்சரிவு மற்றும் சகதியால் சாலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் என்னை வழியிலேயே எங்காவது இரவு தங்கிவிட்டு காலை வருமாறும் அறிவுறுத்தினர். சாலை நெடுகிலும் ஆற்றின் கரையில் பல விடுதிகள் இருந்தன. அடுத்து தென்பட்ட விடுதியிலேயே இரவு தங்க முடிவெடுத்தேன்.கோவிந்த் காட் இன்னமும் அறுபது கிலோமீட்டர்கள். குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாகும். விடியற்காலையே கிளம்ப வேண்டும்.

செப்டெம்பர் மூன்று.

காலை ஆறு மணிக்கு புத்துணர்ச்சியுடன் மீண்டும் பயணம் துவங்கியது. அகலமான - வாகனங்கள் அற்ற சாலையும் உடன் வரும் அலகானந்தா  நதியும் மலைக் காட்சிகளும் காலையின் அமைதியும் சேர்ந்து இன்னுமொரு அனுபவிக்கத்தக்க பயணம். வழியில் பெரிதாக சிக்கல்கள் இல்லை. சீக்கிரம் கொவிந்த் காட் சென்று மலை ஏற ஆரம்பிக்க வேண்டும் என்ற உந்துதலில் எங்குமே நிற்கவில்லை.எட்டு மணி பதினைந்து நிமிடத்திற்க்கு கொவிந்த் காட் பகத் ஹோட்டலை அடைந்துவிட்டேன்.அர்விந்தும் செந்திலும் அப்பொழுதுதான் சென்றிருந்தனர். நானும் அடுத்த அரை மணி நேரத்தில் புறப்பட்டு விட்டேன்.முதல் ஐந்து கிலோமீட்டர்கள் வாடகை காரில்( புல்னா வரை) . மீதம் ஒன்பது கிலோமீட்டர்கள் - மலை ஏற வேண்டும்.

கோவிந்த் காட் அலகானந்தா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய டவுன்.பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் செல்லும் பக்தர்கள் மற்றும் vof செல்லவரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை அங்கிருந்துதான் துவங்க வேண்டும். சீக்கியர்கள் வழிபடவும் பயணத்திற்க்கு முன் தங்கவும் பெரிய குருத்வாரா ஒன்று உள்ளது. கோவிந்த்காட் டிலிருந்து கங்காரியா செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. ஹெலிபேட் பகத் ஹோட்டலின் இடத்தில்தான் உள்ளது.

கோவிந்த் காட் கடல் மட்டத்திலிருந்து
1828 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. ஏறக்குறைய ஏற்காடு உயரம்.
செப்டெம்பரில் குளிர் அதிகமில்லை. மித மான வெப்ப நிலை.


கோவிந்த் காட் டிலிருந்து புல்னா வரை வாடகை காரில் சென்று மலை ஏற்றத்தை ஆரம்பிக்க ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. மழைக்கான அறிகுறியே இல்லாமல் பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்து மனம் புத்துணர்ச்சியானது.

புல்னாவிலிருந்து கங்காரியா ஒன்பது கிலோமீட்டர்கள். சுமார் 1200 மீட்டர் உயரத்தையும் கடக்க வேண்டும் (கங் காரியா - 3049 meters). பொதுவாக இந்த மலை ஏற்றம் சுலபமான ஒன்றாக - ஆரம்ப நிலை trekkers ம் முடித்துவிடக் கூடி ய ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் வயதானவர்களுக்கும் உடல் எடை அதிகமுள்ளவர்களுக்கும் சிரமம்தான். மலை ஏற முடியாதவர்கள் கச்சார் எனப்படும் கோவேறு கழுதைகளில் பயணிக்கலாம். அதில் அமரவும் சிரமப்படுவர்களை (உதாரணத்திற்க்கு சிறுவர்கள் )கூடைகளில் அமரவைத்து முதுகில் தூக்கிச் செல்லவும் ஆட்கள் உண்டு.
பாதை நன்றாக கற்கள் வேயப்பட்டு படிகளுடன் உள்ளது. வழியில் நிறைய சிற்றுண்டி கடைகளும் உண்டு.

சற்று கனமான முதுகுப்பையை சுமந்துகொண்டு மலை ஏறுவது சிரமாக இருந்தது. பையை மட்டும் கச்சருடன் வந்த ஒருவனிடம் கொடுத்து விடுதியில் சேர்க்க சொல்லி விட்டேன். இருந்தும் மிக மெதுவாக நின்று நின்று மூச்சு வாங்கியே முன்னேற முடிந்தது.



கனிசமான மக்கள் கூட்டம். பெரும்பாலானவர்கள் ஹேம்குந்த் சாஹிப்செல்ல வந்த பக்தர்கள். காட்டின் ஒலியும் மணமும் இதமளித்தது. கச்சர்களின் சலங்கை ஒலியும் தொடந்துகொண்டே வந்தது. வழி நெடுக கோவேறு கழுதைகளின் சாணத்தை சுத்தம் செய்ய வேலை ஆட்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

ஐந்து கிலோமீட்டர்கள் சென்றவுடன் லக்‌ஷ்மன் கங்கா நதியை ஒரு சிறி பாலத்தின்மூலம் கடந்தோம் ( இந்த நதி கோவிந்த் காட் டில் அலகானந்தாவுடன் இணையும்).அதற்க்கு பிறகு நான்கு கிலோமீட்டர்கள் பாதை மிகவும் ஏற்றமாக( steep) ஆக இருக்கும் என பயமுறுத்தினர். உண்மைதான்.
மூச்சு வாங்கலும் நின்று ஓய்வெடுக்கும் நேரமும் அதிகமானது.
ஒன்பதரை மணிக்கு ஆரம்பித்த மலை ஏற்றம் மூண்று மணிக்கு முடிவுக்கு வந்தது. அப்பாடா என்றாகிவிட்டது. இதையா சுலபமான மலை ஏற்றம் என்று சொல்கிறார்கள்?

நல்ல பசி.அர்விந்தும் செந்திலும் சற்று முன்னர்தான் வந்ததாக சொன்னார்கள்.

கங்காரியா - ஹேம்குந்த் சாஹிப் மற்றும் vof ற்க்கு வரும் பயணிகளை மட்டுமே நம்பி இருக்கும் இடம். வருடத்தில் பாதி நாட்களில் மட்டுமே வருமானம்.

கங்காரியா கிராம மக்கள் முதலில் மேய்ச்சலை நம்பி இருந்தவர்கள். VOF ஐ பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவித்தவுடன்  சிறு பகுதியினர் சுற்றுலா சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். பெரும்பாலானவர்கள் பிழைப்புக்காக வேறு இடம் பெயர்ந்து விட்டனர்.

கங்காரியா நல்ல குளிராக இருந்தது. நான்கு மணிக்கே மேகம் சூழ ஆரம்பித்துவிட்டது. குளிருக்கு இதமாக வித விதமான உணவு வகைகள் கொண்ட ரெஸ்டாரண்ட்களுக்கு படை எடுத்தோம் .



VOF பற்றி சுற்றுலா துறையினரின் ஒரு டாக்குமெண்ட் ரியை பார்த்துவிட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் அடுத்த நாளுக்கான trek க்கிற்க்கு தயாரானோம். நாளை மழை வரக்கூடாது என வேண்டிக் கொண்டு படுக்கைக்கு சென்றோம். மோசமான கனவுகளுடன் உறக்கம். இரவில் கன மழை. ஐந்து மணிக்கு தலை வலியுடன் கண் விழித்து பார்த்த போது இன்னமும் மழை நன்றாக தூறிக்கொண்டிருந்தது.

தொடரும் ...




Comments

Popular posts from this blog

Ragging: When My Heart Skipped A Few Beats!

Lage Raho Munna Bhai – “GandhiGiri” a modern tribute to Mahatma

Mahanadhi - a common man's fight against flawed system