Uttarakhand Bike Trip 22 Part 1



 


Valley of flowers( VOF) trek பயண யோசனை சட்டென்று உருவானது - பெரிதாக திட்டமிடல் எதுவும் இல்லாமலேயே. விநாயக சதுர்த்திக்கு சில நாட்கள் நாக்பூர் செல்ல வேண்டும் என்று பிராஞ்சலி சொல்லிய மறு வினாடியே மனதில் தோன்றியது. VOF என்னுடைய பக்கெட் லிஸ்ட்டில் இருந்திருந்தாலும் - அங்கு செல்ல இவ்வளவு சீக்கிரம் முடிவெடுத்தது ஆச்சரியமாகவே இருந்தது. அதற்க்கு சமீபத்தில் படித்த உத்தராகண்ட்டின் மலைகளில் அலைந்து திரியும் - “ மைத்ரி “ நாவல் ஒரு முக்கியமான உந்துதலாக இருந்திருக்க வேண்டும்.

முதலில், அந்த நாவலில் வருவது போலவே தனியனாக செல்லத்தான் யோசித்தேன் - துணைக்கு மைத்ரி கிடைப்பாள் என்ற நப்பாசையாலோ என்னவோ. இருந்தாலும் கேட்டு பார்ப்போமே என்று பயண விவரத்தை செயலற்று- இறக்கும் தருவாயில் - கிடக்கும் ZNMD க்ரூப்பில் பகிர்ந்தேன். இந்த மாதிரி பயணங்களில் அன்று தொடங்கி இன்று வரை Goa சென்ற அந்த நான்கு bikomaniacs மட்டுமே ஆர்வமுள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. புதிதாக கிளம்பியுள்ள இன்னொருவன் கதிர். அவன் அதே சமயத்தில் லே, லடாக் செல்லும் உற்சாகத்தில் இருந்தான். சங்கரும் கார்த்தியும் வர முடியாத சூழல். அர்விந்த் மட்டும் தன்னுடைய நண்பன் ஒருவனுடன் வருவதாக தெரிவித்தான்.

மெதுவாக பயண ஏற்பாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்க ஆரம்பித்தது.

இப்படி திட்டமிட்டோம்.

செப்டம்பர் 1 - டெஹ்ராடூன் சென்று சேர்வது. ( ஏற்கனவே பேசி வைத்த) வாடகை மோட்டார் சைக்கிளை பார்த்து பயணத்துக்கு தயார் நிலையில் வைப்பது. அர்விந்தும் அவன் நண்பனும் காரில் வருவதாக முடிவானது. அதற்க்கு டாக்சியும் பேசி வைத்தாகிவிட்டது.

செப்டெம்பர் 2 :

டெஹ்ராடூனிலிருந்து கோவிந்த் காட் பயணம். ஏறக்குறைய 300 கிலோமீட்டர்கள். ரிஷிகேஷ், தேவ் ப்ரயாக், ஶ்ரீ நகர்( uk), ருத்ர பிரயாக் , கர்னப்ர யாக், ஜோசிமட் வழியாக. மலைப்பாதை என்பதால் சுமார் ஒன்பது மணி நேரம் ஆகும்.

செப்டெம்பர் 3 

கோவிந்த் காட்டிலிருந்து கங்காரியா trek. மொத்தம் 14 கிலோ மீட்டர்கள். அதில் முதல் ஐந்து கிலோ மீட்டர்கள் வரை சாலை வசதி உண்டு. ஆதலால் வாடகை காரில் செல்லலாம். மீதி 9 கிலோமீட்டர்கள் trek.

செப்டெம்பர் 4 

கங்காரியாவிலிருந்து VOF trek. நான்கு கிலோமீட்டர்கள். போய்வர எட்டு.

மீத நாட்களுக்கு பெரிதாக திட்டமிடவில்லை. ஆறாம் தேதி அர்விந்தும் அவன் நண்பனும் வீடு திரும்ப முடிவெடுத்தனர். நான் ஒன்பதாம் தேதி திரும்ப திட்டமிட்டேன். மீதி மூன்று நாட்களை பக்கத்தில் இருக்கும் ஏதாவது இடங்களை பார்க்கலாம் என எண்ணினேன்.

பயணங்கள் என்றாலே தடைகளும் கூடவே வருவது இயல்புதானே.

எங்கள் பயணத்திற்க்கு ஒரு வாரத்திற்க்கு முன்பு உத்தராகண்ட் உட்பட வட இந்தியா முழுவதும் நல்ல மழை. ஊடக செய்திகளில் ஒரே வெள்ளக்காட்சி. கடைசி வாரம் முழுவதும், திட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருக்குமோ என்ற பதைபதைப்பு இருந்து கொண்டே இருந்தது. முடிவில், என்ன ஆனாலும் சரி, அங்கு செல்வது - சென்றபின் நிலைமையை ஆராய்ந்து தேவைப்பட்டால் திட்டத்தை மாற்றி வேறு எங்காவது செல்லலாம் என முடிவெடுத்தோம்.

*******
ஆகஸ்ட் 30 ம் தேதி.
வழக்கம் போல கடைசி நிமிட பேக்கிங் விடியற்காலைவரை நீண்டது. saddle bag, riding gears, helmet என மோட்டார் சைக்கிள் பயணத்திற்க்கான அனைத்தையும் உடன் எடுத்துச் செல்ல முடிவெடுத்து - சிரமப்பட்டு பைகளுக்குள் திணித்தேன். இடமில்லாத காரணத்தால் குளிருக்கான உடைகள் எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை.

ஆகஸ்ட் 31 ம் தேதி நாக்பூர் சென்று மனைவி மற்றும் மகளை விட்டுவிட்டு, அங்கிருந்து செப்டம்பர் 1 ம் தேதி டெல்லி வழியாக டெஹ்ராடுன் சென்றேன். நான்கு ஐந்து வருடங்களாக இதுபோல் பயணம் எங்கும் செல்லாததால் மனம் உற்சாகமாக படபடப்புடன் இருந்தது. டெல்லியில் அர்விந்த் மற்றும் அவன் நண்பனும் இணைந்து கொண்டனர். டெஹ்ராடுன் டெல்லியிருந்து மிக அருகில் இருப்பதால் விமானம் take off ஆன சிறிது நேரத்திலேயே land ஆன மாதிரி இருந்தது. விமான நிலையத்தில் இறங்கியதும் பெரிதாக மழை இல்லாததைப் பார்த்து பெருமூச்சு விட்டோம்.

டெஹ்ராடுன் :

டெஹ்ராடுன் என்றதுமே முதலில் நினைவிற்க்கு வருவது எழுத்தாளர் Ruskin Bond தான். அவர் எழுத்தைப் படித்து படித்து டெஹ்ரா பற்றி ஒரு கற்பனையான பிம்பம் மனதில் தோன்றிவிட்டது. கொடைக்கானல் போல அது ஒரு உயரத்தில் இருக்கும் குளிரான இடம் எனவும், மக்கள் தொகை குறைவாக இயற்க்கையுடன் இணைந்து வாழ சரியான இடம் எனவும் நினைத்தேன். சில வருடங்களுக்கு முன்பு கூட அங்கு வேலை தேடி சென்று வாழலாம் என்று யோசித்திருந்திருக்கிறேன். முதல் அதிர்ச்சி விமானம் இறங்கும் முன்னரே வெப்ப நிலையை அறிவிக்கும் போது ஏற்பட்டது. முப்பதுக்கும் மேலான டிகிரி செல்சியஸ் - டெல்லியைவிட சிறிதளவே குறைவு. அதனால் சந்தேகம் வந்து உடனே கூகுளில் altitude ஐ பார்த்தேன். டெஹ்ரா கடல் மட்டத்திலிருந்து வெறும் 640 மீட்டர் உயரத்திலேயே உள்ளது.

டெஹ்ராடுன் - Doon valley யில் எல்லா பக்கமும் மலைகள் சூழ அமைந்துள்ளது. இமய மலை மூன்று தொடர்களாக மேற்கிலிருந்து கிழக்கே ஒன்றன்பின் ஒன்றாக நீள்கிறது (இமய மலை எப்படி உருவானது என்ற வரலாறு வியக்க வைக்கும் ஒன்று). வடக்கே great himalayas மலைத்தொடர்( Himadri) மிக உயரமானது அகலமானது. அடுத்து middle himalayas or lesser himalaya மலைத்தொடர். இதற்க்கு உயரமும் அகலமும் சற்று குறைவு. அதற்க்கு தெற்கே outer himalayas ( shiwalik). மிகவும் உயரமும் அகலமும் குறைந்த மலைத்தொடர். இந்த doon valley, middle himalaya வுக்கும் shiwalik க்கிற்க்கும் இடையில் அமைந்துள்ளது.

டெஹ்ரடுன் விமான நிலையம் முப்பது கிலோமீட்டர் ஊருக்கு வெளியே ரிஷிகேஷ் செல்லும் வழியில் உள்ளது. சுற்றிலும் அடர்ந்த காடு. சிறுத்தை ஒன்று தடம் மாறி சாலையில் உலவியதாக கார் ஓட்டுனர் சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அர்விந்த் விமான நிலையத்திற்க்கு அருகிலேயே பத்மினி பேலஸ் என்ற விடுதியில் ரூம் போட்டிருந்தான். பேலஸ் பெயரில் மட்டும்தான் இருந்தது. மிகவும் சுமாரான தங்குமிடம்.

டெஹ்ரடுன் புழுக்கமாக இருந்தது. ஏஸி இல்லாமல் தூங்க முடியாது என்ற அளவுக்கு சங்கடமாக இருந்தது.

நான் மோட்டார் சைக்கிளை எடுத்து வர டெஹ்ரா டவுனுக்கும் அவர்கள் ரிஷிகேஷிற்க்கு கங்கா ஆர்த்தியை படம் பிடிக்கவும் செல்ல முடிவாகி கிளம்பினோம்.

டெஹ்ரா டவுன் - போக்குவரத்து நெரிசல் , சத்தம் , குப்பைகளுடன் இந்தியாவின் மற்ற இடங்களைப் போலவே இருந்தது. டெஹ்ரா பற்றி நான் கற்பனை செய்து வைத்திருந்த பிம்பம் முழுவதும் நொறுங்கிப்போனது.

“டெஹ்ராடுன் பைக் ரென்டல்” என்ற இடத்தில்தான் மோட்டார் சைக்கிளை சொல்லி வைத்திருந்தேன். நான் வழக்கமாக ஓட்டி பழக்கப்பட்ட thunder bird 500 தான் வேண்டும் என கேட்டிருந்தேன். அங்கு சென்றபோது பைக் எதுவும் தயாராக இல்லை. ஒரு TB 500 ஐ எலும்புக்கூடாய் பிரித்து போட்டிருந்தனர். அது இப்போதைக்கு ரெடியாகும் போல் தெரியவில்லை. ஏமாற்றமாக இருந்தது. உரிமையாளன், மூன்று மாதத்திற்க்கு முன் வாங்கிய ஒரு புதிய Royal Enfield Meteor 350 cc இருப்பதாகவும் , அது நன்றாக இருக்கும் எனவும் பரிந்துரைத்தான்.
Tubeless tyres, lesser vibration, ABS etc என அதன் புகழ் பாடினான். சந்தேகத்துடன்தான் ஓட்டி பார்த்தேன். உடனே எனக்கும் அந்த பைக் மிகவும் பிடித்து விட்டது. மற்ற ராயல் என்பீல்டுகள் போல அதிர்வுகள் அதிகம் இல்லாமல் மென்மையாக, சொல்வதை கேட்கும் மிக சாந்தமான நண்பனாக அதை உணர்ந்தேன்.

இரவு உணவையும் டவுனிலேயே முடித்துக் கொண்டு பத்மினி பேலஸை அடைய இரவு ஒன்பது மணியாகிவிட்டது. அர்விந்த் எடுத்த கங்கா ஆர்த்தி புகைப்படங்களை சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டு உறங்கிப்போனோம்.

Day 1 : செப்டெம்பர் 2



விடியற்க்காலை மோட்டார் சைக்கிள் பயணம் இனிதாக இருக்கும் என்பதால் ஐந்து மணிக்கே விழித்து ஆறு மணிக்கு கிளம்பி விட்டேன். அர்விந்தும் நண்பனும் காலை சிற்றுண்டி முடித்துவிட்டு மெதுவாக வருவதாக முடிவெடுத்தனர். எதிர்பார்த்ததைப் போலவே காலை பயணம் சிறப்பாக இருந்தது. இரு புறமும் மரங்கள் அடர்ந்த சாலை. வாகன நெரிசல் இல்லை. முகத்தை வருடும் இதமான காற்று. இதற்க்காகத்தானே ஏங்கினேன். கூண்டிலிருந்து விடுபட்ட பறவையாக சிறகு விரித்து சீரான வேகத்தில் சென்றேன். வானத்தில் மேகங்கள் இருந்தாலும் மழை இல்லை. சிறிது தூரத்தில், போன வாரம் பெய்த கன மழையால் சந்திரபாகா நதி சாலை ஓரத்தின் ஒரு பகுதியை அரித்து உள்வாங்கியிருந்தது. ஆனால் நதியில் அதிக வெள்ளமில்லை.தண்ணீர் மிகக் குறைவாகத்தான் இருந்தது.

ஏழு மணிக்கு முன்னரே ரிஷிகேஷ் சென்றடைந்தேன். சாலையோர கடையில் டீ அருந்தி விட்டு மெதுவாக முன்னேறினேன். ரிஷிகேஷிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டருக்குள் எதிர்பாராத ஒரு செய்தி. சென்ற வாகனங்கள் அனைத்தும் திரும்பி வந்து கொண்டிருந்தன. அவர்கள் ஏதோ கையை அசைத்து நாடக பாணியில் சொல்லிக்கொண்டிருந்தனர். என்ன என்று தெளிவாக புரிய சிறிது நேரமானது.




இரவு பெய்த மழையால் landslide ஆகி சாலை மூடிவிட்டது. சுத்தமாக வழியில்லை. இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாது. சரி செய்ய நீண்ட நேரமாகலாம் எனவும் தெரிவித்தனர். செய்வதறியாது சிறிது நேரம் திகைத்து நின்றேன்.

தொடரும்…









Comments

  1. Very good Thrilling real story🙏👍💐

    ReplyDelete
  2. Very good Thrilling real story🙏👍💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Ragging: When My Heart Skipped A Few Beats!

Lage Raho Munna Bhai – “GandhiGiri” a modern tribute to Mahatma

Mahanadhi - a common man's fight against flawed system